லூதியானா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

சண்டிகர்:

லூதியானா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சி தேர்தல் 24ம் தேதி நடந்தது. 95 வார்டுகளில் 494 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ் தனித்தும், அகாலிதளம்- பாஜக கூட்டணியும், ஆம் ஆத்மி-லோக் இன்சாஃந் கட்சி கூட்டணியும் போட்டியிட்டன.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தம் உள்ள 95 வார்டுகளில் காங்கிரஸ் 62 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளம் 11 வார்டுகளில் வெற்றி பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. பாஜக 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் லாக் இன்சாஃப் கூட்டணி 8 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. சுயேட்சைகள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த அமோக வெற்றியை தொடர்ந்து தொண்டர்களை முதல்வர் அமரீந்தர் சிங் பாராட்டியுள்ளார். அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த வெற்றி எதிரொலித்துள்ளது. அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது என்று முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.