அகமதாபாத் நகரின் பெயர் மாற்றம் ஒரு தேர்தல் ஸ்டண்ட் : காங்கிரஸ்

கமதாபாத்

கமதாபாத் நகரின் பெயரை கர்ணாவதி என மாற்ற தமது அரசு தயாராக உள்ளதாக துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

வட இந்தியாவில் தற்போது பல நகரங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்ந்து வருகிறது. அலகாபாத் நகர் பிரயாக் ராஜ் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் மாற்றம் ஏற்கனவே பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் செய்யப்பட்டதாகும்.

தற்போது குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் கர்ணாவதி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பாஜகவினர் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு அவர்கள் புராண மற்றும் இதிகாச கதைகளை எடுத்துக் காட்டாக கூறுகின்றனர்.

அந்தக் கதையின் படி சாளுக்கிய மன்னன் கர்ணன் அஷாவல் நாட்டு அரசரை தோற்கடித்ததை குறிபிடும் வகையில் சபர்மதி நதிக்கரையில் அமைக்கப்பட்ட நகர் கர்ணாவதி ஆகும். அந்த நகரம் அதன் பிறகு இஸ்லாமிய மன்னர் சுல்தன் அகமது ஷாவால் அகமதாபாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

இதுவே பாஜகவினர் தெரிவிப்பதாகும்.

இதை ஒட்டி குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், “அகமதாபாத் நகரின் பழைய பெயரான கர்ணாவதி என்னும் பெயரை மீண்டும் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இந்த பெயரை மாற்றுவது என்பது சரியான நேரம் என தோன்றுகிற்து. அதனால் இந்த நகரின் பெயரை மாற்ற அரசு உத்தேசித்து வருகிறது. அவ்வாறு பெயர் மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனிஷ் தோஷி, “அகமதாபாத் நகரின் பெயரை மாற்றுவது என்பது தேர்தலுக்காக பாஜக செய்யும் ஒரு ஸ்டண்ட் வேலை ஆகும். பாஜகவை பொறுத்த வரை அகமதாபாத் நகரின் பெயர் மாற்றமும் ராமர் கோவிலும் தேர்தலுக்கு மட்டுமே தேவையான ஒன்றாகும். மொத்தத்தில் இந்து மக்களை பாஜக ஏமாற்றி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.