மன்மோகன் சிங் மீதான மோடியின் குற்றச்சாட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி

டில்லி:

மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காங்கிரஸ் இன்று எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் முன்னாள் தூதர், இந்திய முன்னாள் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் தனக்கு எதிராக ரகசிய சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி குஜராத் தேர்தலின் போது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். லோக்சபா அலுவல் தொடங்குவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்ததும் அவையின் மையப் பகுதிக்கு வந்து நின்று பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

மன்மோகன் சிங் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து கூச்சல்- குழப்பம் நிலவியதால் அவையை பிற்பகல் வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மக்களவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் அவை அலுவலை ஒத்திவைத்துவிட்டு, இதுகுறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்தனர். அந்த நோட்டீஸ்களை ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியன் நிராகரித்தார்.

அப்போது ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் (காங்கிரஸ்) குறுக்கிட்டு, எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்றார். ராஜ்யசபாவுக்கு பிரதமர் மோடி வந்து தனது கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை குரியன் ஏற்கவில்லை.

அவையின் மைய பகுதிக்கு வந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பிற்பகல் வரையிலும் அவையை குரியன் ஒத்திவைத்தார். பிறகு அவை மீண்டும் கூடியதும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், ‘‘ மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங் குறித்து தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.