எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களில் ராகுல்காந்திக்கு முதலிடம்….குமாரசாமி

பெங்களூரு:

கர்நாடகா முதல்வர் குமாரசாமி ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழுக்கு பிரத்யே பேட்டி அளித்துள்ளார். அதன் விபரம்…

‘‘எதிர்கட்சிகள் கூட்டணியில் பெரிய கட்சி என்று பார்த்தால் காங்கிரஸ் தான். அதனால் இயற்கையாகவே ராகுல்காந்தி தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளார். கர்நாடகாவில் எங்களது கூட்டணி சார்பில் 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இதற்காக கடுமையான பணியாற்றப்படும். ராகுல்காந்திக்கு ஆதரவாக நாங்கள் அவரது பின்னால் நிற்போம்.

மாநிலங்களுக்கு இடையே பல விதமாக அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. பாஜக.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தலைவர்களையும் சமரசம் செய்வோம். இதை தவிர வேறு வழி இல்லை’’ என்றார் குமாரசாமி.

குமாரசாமி மேலும் கூறுகையில்,‘‘பாஜக.வுக்கு எதிரான மாநில அரசியல் கட்சி தலைவர்களிடம் தேர்தல் முடிவுக்கு பின்னர் உட்கார்ந்து பேச வேண்டும். ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்தால் தான் இலக்கை அடைய முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட பிரச்னைகளை விட நாட்டின் நலன் முக்கியம். தேர்தலுக்கு முன்னரே அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் நிலையான ஆட்சி தருவோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தேவகவுடா பிரதமராகும் திட்டம் எதுவும் இல்லை. அவர் பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் இல்லை. நானும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நல்ல நிர்வாகத்தை கொடுக்க நான் கர்நாடகாவில் தான் கவனம் செலுத்துவேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ கர்நாடகாவில் தொகுதி பங்கீடு என்பது ஒரு பிரச்னை கிடையாது. பரஸ்பர புரிதல் மூலம் இதற்கு தீர்வு காணப்படும். தேர்தலில் எங்களது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிட்டு பார்த்தால் கூடுதலாக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்ற தேர்தலோடு, கர்நாடகா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சித்தராமையாவின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அரசியல் பகுப்பாய்வுகளை உருவாக்கலாம். ஆனால் அதில் தீவிரமாக ஆராயக் கூடாது.

தற்போது எனது அரசு சவுர்கயமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் பாஜக.வுக்கு கதவுகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் பாஜக.விலும், இதர கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்’’என்றார்.