டில்லி

பாஜகவுக்கு காங்கிரஸ்தான் மாற்று எனவும் மூன்றாம் அணி ஆட்சிக்கு வராது எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   இரண்டு நாட்களுக்கு முன், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் கருணாநிதியையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார்.   இது மூன்றாவது அணியில் திமுகவை இணைக்க நடந்த சந்திப்பு என கூறப்படுகிறது.

தற்போது திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரசின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் டில்லியில் இருக்கிறார்.   அவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர், ”எப்போதுமே இந்தியாவில் 3 ஆவது அணியோ, 4 ஆவது அணியோ ஆட்சிக்கு வரவே முடியாது.   காங்கிரஸ் மட்டுமே பாஜகவுக்கு மாற்று ஆகும்.  ராகுல் காந்திதான் மோடியை மாற்றி பிரதமராகப் போகிறார்.    காங்கிரஸ் கூட்டணி மட்டுமே பலம் பொருந்தியதாக இருக்கும்.    காங்கிரஸ் பலத்தை குறைக்க பாஜக சதி செய்து இன்னொரு அணியை உருவாக்கினால் அந்த அணிக்கு மக்கள் ஆதரவு இருக்காது.

தற்போது அந்த அணியில் சேரும் பல கட்சிகள் தேர்தலுக்குப் பின் காங்கிரசை ஆதரிக்கப் போகின்றன.   காங்கிரசைப் போல் அவர்களால் நிலையான ஆட்சியை அளிக்க முடியாது.   மு. க. ஸ்டாலின் பாஜகவை பதவியில் இருந்து நீக்கவே வேறு சில கட்சிகளை சந்திப்பதாக கூறி உள்ளார்.   காங்கிரசை விட்டு விலகப்போவதாக அவர் சொல்லவில்லை.

மம்தாவுக்கும் சந்திரசேகர ராவுக்கும் தமிழகத்தில் ஆட்களே இல்லை.   மேற்கு வங்கத்திலும் தெலுங்கானாவிலும் திமுக கிடையாது.   அதனால் இந்தக் கூட்டணி அமைந்தாலும் ஒரு பயனும் இல்லை.   ஆகவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.   மக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரசுக்கே வாக்களிப்பார்கள்.

காங்கிரஸ் – திமுக கூட்டணி இன்னும் தொடர்கிறது.   மேலும் சில கட்சிகள் சேர விருப்பப்பட்டால் அது குறித்து ஆலோசிக்கப்படும்.   தேர்தல் நேரத்தில் யாருக்கு எவ்வளவு இடம் என்பதை முடிவு செய்யப்படும்.   அதைத்தான் மு.க.  ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி என கூறி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்