டெல்லி :
ஊரடங்கின் நோக்கம் இந்தியாவில் தோல்வியடைந்து விட்டது அதற்கு காரணம் எந்த திட்டமிடலும் இல்லாமல் செயல்படும் பிரதமர் மோடியின் அணுகுமுறை தான் என்று நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று, காங்கிரஸ் கட்சி ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் முன்னெடுத்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் பலர் போக்குவரத்து வசதி இல்லாததால் இன்னும் கூட வீட்டிற்கு நடந்தே செல்லவேண்டிய அவல நிலை தொடர்கிறது அல்லது பெரிய நகரங்களில் சிக்கி ஷ்ராமிக் ரயிலில் இருக்கை பெற முயற்சிக்கின்றனர்.
“அறியாமைக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது, அக்கறையின்மைக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது, பாஜக அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது ” என்று ஸ்பீக் அப் இந்தியா எனும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டுவருகின்றனர்.
 
 

பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களை வெளியிடவும், ஒரு குறும்படம் அல்லது ஒரு செய்தியை வீடியோவாக பதிவிடவும் தனது கட்சியினரை காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. இந்த அவலத்தை அரசுக்கு எடுத்துரைக்க, அரசின் செவிகளில் சென்று சேர, இந்த அரசாங்கத்தின் ஆணவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பேசுங்கள், ‘பேசு இந்தியா’ என்று காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#SpeakUpIndia என்பது ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஒரே நாளில் பேஸ்புக்கில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக்கில் ஒன்றாக இந்த ‘ஸ்பீக் அப் இந்தியா’ ஹேஷ்டேக் மாறியிருக்கிறது..
50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர், இதுவரை 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த பிரச்சாரத்தின் மூலம் தங்கள் குறைகளை சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


தனக்கு சாதகமான சமூக வலைதள கணக்கெடுப்புகளை உதாரணமாக காட்டும் பா.ஜ.க. அரசு அதே சமூக வலைதளத்தில் வைக்கப்படும் இந்திய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா அல்லது வழக்கம் போல், எல்லையில் பாகிஸ்தான் எல்லையில் சீனா, என்று சால்ஜாப்பு காட்டுமா என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.