ஹூப்ளி: மகதாயி ஆறு விவகாரத்தை தீர்க்கமுடியாத முதலமைச்சர் எடியூரப்பா வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் விமர்சித்து இருக்கிறார்.

ஹூப்ளியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டி.கே. சிவகுமார் கூறி இருப்பதாவது: விவசாயிகளின் முக்கிய பிரச்னை மகதாயி ஆறு விவகாரம். கலசா, பந்துரி திட்டத்துக்காக தண்ணீரை மாற்றிவிட இந்த அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

நிர்வாக அனுமதியின்றி, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார். அதே ஆர்வத்தை எடியூரப்பா ஏன், மகதாயி ஆறு பிரச்னையின் மீது காட்டவில்லை என்று தெரியவில்லை.

எனவே, பாஜகவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்கவேண்டும். இடைத்தேர்தலில் ஜெயிப்பவர்களுக்கு அமைச்சர் பதவி என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகளை மிகபெரிய ஊழல் என்று கூறலாம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.