சென்னை

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு மனநல சிகிசை அளிக்க தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை செயல் தலைவர் முன்னா என்னும் கொவுஸ்மைதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்.    குறிப்பாக அவர் பாஜகவை ஆதரித்தும்,  காங்கிரஸைத் தாக்கியும் வெளியிடும் கருத்துக்கள் எதிர்க்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.    இதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை செயல் தலைவர் முன்னா என்னும் கொவுஸ்மைதீன் தமிழக அரசுக்கு அமைச்சருக்கு மன நிலை சரியில்லை என  புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள அந்த  கடிதத்தில் கொவுஸ்மைதீன், “ அன்புடையீர், வாழ்க வளமுடன்.   தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் திரு.  சோனியா காந்தி அன்னை அவர்களையும்,  இளந்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களையும் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  மேலும் இதே போன்று கடந்த மார்ச் 08,2019 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒரு கட்சி இல்ல விழாவில் ’மோடி எங்கள் டாடி’ என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு கடந்த 13.05.2019ம் தேதியன்று நடிகரும் அரசியல்  தலைவருமான கமலஹாசன் அவர்களின் கொழுப்பேறிய “நாக்”கை அறுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.  எதோ மனநிலை பாதித்து நிலை தடுமாறிப் பேசியுள்ளார் என்பதை மட்டும் நாம் அறிவோம்.   இதே நிலை நீடித்தால்  அம்மா அவர்களது ஆளுமை இல்லாத காரணத்தால் அ இ அ தி மு க கட்சிக்கும் தங்களுக்கும் மக்கள் முன் குரோதம், கோபமும் மேலும் வலு சேர்ந்து விடும்.

ஆதலால் மருத்துவ சுகாதார அமைச்சருமான தாங்கள் திரு.  ராஜேந்திர பாலாஜி அவர்களை தாங்களே முன்வந்து நன்கு பரிசோதித்து மருத்துவச் சிகிச்சை அளிக்குமாறு வேண்டுகிறோம்.  திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் இது போன்ற மனநிலை பாதித்த  பேச்சுக்களை விட்டுத் தவிர்க்கப் பூரண குணமடைய வேண்டுமென ஏக வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.  நன்றி.  ஜெய்ஹிந்த் “  எனக் குறிப்பிட்டுள்ளார்.