நாட்டை விட தேர்தல் பிரச்சாரத்தில் தான் மோடிக்கு ஆர்வம்….சசிதரூர்

திருவனந்தபுரம்:

நாட்டை இயக்குவதை விட தேர்தல் பிரச்சாரத்தில் தான் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார் என்று சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் பேரணியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் நம்பிக்கை வைத்திருந்த அவர்களது உழைப்புக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை.

வெற்று வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் பலதரப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், ஒரு குடும்பத்தின் நலன் குறித்து மட்டுமே அவர்கள் கவலைப்பட்டனர். விவசாயிகளை அவர்கள் வாக்கு வங்கியாக தான் பார்த்தார்கள்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,‘‘பிரதமர் மோடி நாட்டை இயக்குவதை விட தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆர்வமாக உள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய பல பேச்சுக்களை நாங்கள் கேட்டுள்ளோம். குறிப்பாக ஒரு குடும்பத்தை அவர் குறி வைத்து தாக்கி பேசுகிறார். காங்கிரஸ் செய்த அனைத்து விஷயங்களை அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

1947ம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கை 79 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் 90 சதவீதம் பேர் இருந்தனர். இது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயேர் விட்டுச் சென்ற போது மனிதனின் ஆயுள் காலம் 27 என்ற நிலையில் இருந்தது. இது தற்போது 70 என்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போதைய பாஜக ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை மக்களுக்கு கிடைக்கிறது. இவை அனைத்தும் காங்கிரஸ் வழங்கிய உரிமைகள். ஒரு மனிதர் (மோடி) வெறும் அரசியல் காரணங்களுக்காவே இவ்வாறு பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

அதனால் நாம் அவரை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு அவர் என்ன செய்துள்ளார்? என்பதை பார்க்க வேண்டும். செயல்பாடு என்பது அவரிடம் ஒன்றுமே இல்லை. நாட்டை இயக்குவதை விட தேர்தல் பிரச்சாரத்தில் தான் மோடி ஆர்வமாக உள்ளார்’’ என்றார்.