இது ஒரு ஆட்சி! அதற்கு ஒரு முதலமைச்சர்! எடியூரப்பாவுக்கு ஜீரோ மார்க் தந்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்துக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் தருவேன் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில், பாஜக அரசு பொறுப்பேற்று 100வது நாள், நாளை கொண்டாடப்படுகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா இருக்கிறார்.

பாஜக ஆட்சி குறித்தும், முதலமைச்சர் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இது குறித்து பெங்களூருவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆட்சி சிறப்பாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறி இருப்பதாவது:

ஆட்சியின் போது மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்யம். அவரது நிர்வாகத்தில் மாநிலத்தில் ஒன்றும் நடக்கவில்லை.

17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், அதற்காக ஏராளமான பணம் செலவிட்டது, இதை தான் அவர்கள் செய்தனர். இது தான் ஒரு மாநிலத்தின் ஒரு வளர்ச்சியா?

மாநிலத்தில் இதற்கு முன்பே நடக்காத அளவு பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதான் அவர்களின் 100 நாள் ஆட்சியில் சாதித்தது என்றார்.