நவ.4 நோக்கி சோனியா காந்தி! எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி: மகாராஷ்டிரா,  அரியானா தேர்தல் முடிவுகள் தந்த உற்சாகத்தில், வரும் 4ம் தேதி, காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும், அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் அக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.

இரு மாநிலங்களிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. அதனால் கட்சி தலைமையும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதனால், சோனியா காந்தி வரும் 4ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் அவர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து தேசிய அளவில் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப் போவது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்.

கூட்டத்தில், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகள் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

நவம்பர் 18 முதல் துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் இடையே பல்வேறு விவகாரங்களில் ஒத்தக் கருத்தை வளர்க்க இந்த கூட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.

மேலும் டெல்லி மற்றும் நவம்பர் 30ல் துவங்கும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை முன் வைத்தும் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்ட்டூன் கேலரி