கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்பு: ஸ்டாலின்

--

சென்னை:

திமுக முன்னாள்  தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த கருணாநிதியின் திருஉருவச் சிலை திறப்பு விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகை தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்  என்று திமுக தலைமை தெரிவித்து உள்ளது.

திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில், டிசம்பர் 16ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி  மற்றம் முக்கிய  அரசியல் கட்சி தலைவர்கள், வடஇந்திய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு  அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கூட்டணி தலைவருமான சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ந்தேதி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஸ்டாலின் அழைப்பை ஏற்று  திமுக தலைவர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலினின் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்திய அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதனுடன் சோனியா காந்தியின் பதில் கடிதத்தையும் இணத்து வெளியிட்டு உள்ளார்.

ஐக்கிய முற்போக்கூட்டணி தலைவராக இருந்து வரும் சோனியா காந்தி, திமுக தலைவர் மறைந்த கருணாநிதிக்கு நெருக்கமானவரும், பெரிதும் மதிப்பிற்குரிய தலைவராகவும்  இருந்து வந்தார். இந்த நிலையில், சோனியா காந்தி கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தர சம்மதம் தெரிவித்து இருப்பது திமுக, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் வரவேற்பையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு திமுக தலைமையக மான அண்ணா அறிவாலயத்தில் எழில்மிகு சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்ணை கவரும் வகையில் எழிலான தோற்றத்தில் 8 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு கருணாநிதியின் வெண்கலச் சிலை டிசம்பர் 16ந்தேதி நிறுவப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் சிலையும் புணரமைக் கப்பட்டு அருகே நிறுவப்பட இருப்பதாகவும்  திமுக தெரிவித்துள்ளது.