உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பெங்களுரூ:

ளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம் என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறைக்கு மூல காரணமான நவீன் பா.ஜனதா ஆதரவாளர் ஆவார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்தால் தான் வன்முறை ஏற்பட்டுள்ளது. அந்த முகநூல் பதிவு தவறானது. நவீனுக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஆவார். ஆனால் நவீனுக்கும், அகண்ட சீனிவாசமூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் 2 பேரும் 10 ஆண்டுக்கும் மேலாக பேசி கொள்வதே இல்லை.

வன்முறை சம்பவத்தை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தவில்லை. வன்முறையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். வன்முறையை தூண்டும் விதமாக யாரும் கருத்துகளை தெரிவிக்க கூடாது. மாநிலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதை தவிர்த்துவிட்டு, அமைதி நிலவ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். இதனால் வன்முறைக்கு காரணமானவர்கள் யார்? உண்மை நிலை என்ன என்பது குறித்து காங்கிரஸ் சார்பில் விசாரணை நடத்த முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்ய உள்ளனர். இந்த குழுவில் கே.ஜே.ஜார்ஜ், ஹரிபிரசாத், கிருஷ்ணபைரே கவுடா, நாசின் அகமது உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறைக்கு முன்பாக முகநூல் பதிவிட்ட நவீன் குறித்து சிறுபான்மையினர் புகார் அளிக்க சென்றுள்ளனர். 3 மணிநேரமாகியும் போலீசார் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்ய முன்வரவில்லை. இதுதொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு போலீசாரே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.