கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் தலைமையில் கூட்டணி கட்சியினர் தர்ணா போராட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: மாநில அரசுக்கு எதிராக செயல்படும்  ஆளுநர் கிரண் பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி, மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சியின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டது முதல், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார்.இதனால், ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே லடாய் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (ஜனவரி 8) முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்  தொடர்  போராட்டம் நடத்தப்படும்எ ன அறிவிக்கப்பட்டது.

போராட்டம் எதிரொலியாக  புதுச்சேரி  மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க்,  ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம், கொரோனா மருத்துவமனை வளாகம் மற்றும் பிற பகுதிகளில் 500 மீட்டர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் போராட்டத்தின்போது,  அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பாதுகாப்புக்கு மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து 500 மீட்டர் தொலைவு வரை மூன்று அடுக்கு பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் போராட்டம் நடைபெறும் இடம் ஆளுநர் மாளிகைக்கு பதிலாக புதுச்சேரி  அண்ணா சாலைக்கு மாற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டமாக நடைபெறாது என்றும்,  வரும் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே போராட்டம் நடக்கும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் எ.வி.சுப்பரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி போராட்டம் அண்ணாசாலையில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் புதன்கிழமை (ஜனவரி 6) நடந்த அலுவலக கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் (toxic liquid) கலந்து இருப்பதாக புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரால், குடிநீர் பாட்டில் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் பாட்டிலில் நிறமில்லா நச்சு திரவம் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் அங்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பாதுகாப்பு பணிக்கு துணைராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பரபரப்பு நிலவி வருகிறது.