புதுடெல்லி: சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுக்களில், காங்கிரஸ் கட்சி தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார கமிட்டிகளில் அது தனது தலைமைப் பதவிகளை இழந்துள்ளது.

எந்த குழுக்களிலும் இடம்பெற முன்னாள் பிரதமர் விரும்பாத நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளிவிவகார கமிட்டியிலிருந்து பாதுகாப்பு கமிட்டிக்கு மாறியுள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கடந்தமுறையைப் போலவே, இந்த முறையும் எந்தக் குழுவிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன்சிங் தற்போதைக்கு எதிலும் இடம்பெறவில்லை என்றாலும், ராஜ்யசபா தலைவரான வெங்கைய்ய நாயுடு, இன்னும் மன்மோகனுக்கான வாய்ப்பை திறந்தே வைத்துள்ளார் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தரப்பில் எப்போதெல்லாம் அவரின் பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அப்போது அவர் தனக்கு விருப்பமான குழுவில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குழுவின் தலைவராக பா.ஜ.வின் ஜெயந்த் சின்ஹாவும், வெளிவிவகார குழுவின் தலைவராக பிபி செளத்ரியும், ரயில்வே குழுவின் தலைவராக ராதா மோகன் சிங்கும், பாதுகாப்பு குழுவின் தலைவராக ஜூவல் ஓரமும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.