டில்லி

மோடி அரசால் அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் கடுமையான தேச விரோத சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக அரசு எதிர்க்கட்சிகளை மிரட்ட தேச விரோத சட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும் அது மட்டுமின்றி அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்கவும் இந்த சட்டத்தை பாஜக பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு உதாரணமாக ஜவகர்லா நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மீது தேச விரோத குற்றம் சாட்டப்பட்டதை காங்கிரஸ் சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 2016 ஆம் வருடம் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் நினைவு நாள் கூட்டத்தில் இந்தியாவை எதிர்த்து கோஷமிட்டதை ஆதரித்ததாக கன்னையா குமார் மற்றும் சில மாணவர்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டு பதியப்பட்டது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி ஜாமீனில் வந்த கன்னையாகுமாரை சந்தித்தார்.

அப்போது அவர் பலகீனமான இந்தியர்களின் குரலைக் கண்டு ஆட்சியில் உள்ளோர் பயந்துள்ளனர். இவ்வாறான அடக்கு முறையால் அவர்கள் பலம் அடைகின்றனர். இந்த அரசின் தவறை சுட்டிக்காட்டுபவர் தேசத்துக்குஎடிரானவர்கள் எனக் கூறி இளைஞர்களின் குரல்வளையை அரசு நெரிக்கிறது.” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், “காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. இந்த அறிக்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான இந்த தேச விரோத சட்டம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்க உள்ளது. அத்துடன் பாஜக அரசு கொண்டு வருவதாக சொல்லி கொண்டு வராத சட்ட மசோதாவான தனி உரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவையும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வர உள்ளது” என தெரிவித்துள்ளார்.