மத்தியபிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ்….25 தொகுதிகள் ஒதுக்க முடிவு

போபால்:

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிர ஈடுபட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 17ம்ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்தியபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

பின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச எல்லைக்கு அருகே உள்ளது. ராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இங்கு நீண்ட காலமாக காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த முறை பாஜக.வை வீழ்த்த காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது. இதேபோல் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பாஜக.வும் தீவிரமாக உள்ளது.