விகாஸ் துபே கைதான கோயிலைக் கங்கை நீரால் கழுவிய காங்கிரசார்..

என்கவுண்டரில் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ்துபே மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கைது செய்யப்பட்டான்.

அங்குள்ள பிரசித்தி பெற்ற மகாகாளி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அவனை ம.பி. போலீசார் கைது செய்து உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மகாகாளி கோயிலுக்குள் சென்று,தரிசனம் செய்து விட்டு வந்த போது விகாஸ் துபே கைது செய்யப்பட்டானா? அல்லது கோயிலுக்குள் நுழையும் முன்னரே கைது செய்யப்பட்டானா என்பது தெரிய வில்லை.

இந்த நிலையில், துபே வந்ததால் மகாகாளி கோயிலின் புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, அந்த கோயிலின் நுழைவு வாயிலைக் காங்கிரசார் நேற்று தூய்மைப் படுத்தினர்.

அந்த வாயிலைச் சட்டமன்ற உறுப்பினர் சாஜன் சிங் வர்மா தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், புனித கங்கை நதி தண்ணீரால் கழுவியும், வேத மந்திரங்கள் ஓதியும் சுத்தம் செய்தனர்.

‘’கொடூர கிரிமினல் பேர் வழியான துபே வந்ததால் மகாகாளி கோயிலின் புனிதம் பாழ்பட்டு விட்டது’’ என்று குற்றம் சாட்டிய வர்மா’’ இந்த கோயிலில் துபேயை சரண் அடையச்செய்யப் பெரிய சதியே நடந்துள்ளது’’ என்றார்.

‘’மகாகாளி கோயிலுக்கு விகாஸ் துபே வந்ததை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டதாக பா.ஜ.க.அரசு சொல்வது பொய் தகவல் ‘’ என்று குறிப்பிட்ட வர்மா’’ மத்தியப்பிரதேச மாநிலத்துக்குள் நெடுந்தொலைவு பயணம் செய்து, துபே உஜ்ஜயினி வந்ததைக் கண்டு பிடிக்காமல் உளவுத்துறை எப்படி கோட்டை விட்டது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி.