விஸ்வரூபமாகும் டிஆர்பி ரேட்டிங் முறைகேடு: நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: டிஆர்பி ரேங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக எழுந்துள்ள விவகாரத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிதரூருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக பிரபல தொலைக்காட்சியான ரிபப்ளிக் உள்ளிட்ட 3 டிவி சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவாகரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சேர்மன் சசிதரூருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அது தொடர்பான விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார். அந்த கடிதத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக் குழு தலையிட வேண்டும் என்று சசிதரூரை அவர் வலியுறுத்தி உள்ளார்.