விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் எடுத்துள்ளது.

இந் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள பிரபல மருத்துவ நிபுணரான கோட்டா நீலிமா பரிந்துரைகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் மாணிக்கம் தாகூர் கூறி இருப்பதாவது: ஓராண்டு கடந்தும் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி இருக்கிறது.

கொரோனா பற்றிய தகவல்களை சேகரித்து அளிக்கும் பத்திரிக்கையாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பலியாகி வருகின்றனர்.

 

எனவே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இது தொடர்பாக 8 பரிந்துரைகள் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

  1. அனைத்து பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
  2. பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
  3. ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் ஆசிரியர் குழு ஊழியர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அனைத்து உதவியாளர்களும் அடங்குவர்.
  4. பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு என்று எந்தவித வயது வரம்பும் இருக்கக்கூடாது.
  5. ஊடக நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.
  6. ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளர்கள், மின்னணு ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பகுதி நேர பத்திரிக்கையாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.
  7. அனைத்து மாநிலங்களில் உள்ள பிரஸ் கிளப்புகள் கோவிட் கேர் மையங்களாக மாற்றப்பட வேண்டும்.
  8. கொரோனா தொற்றால் பலியான பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட இந்த 8 பரிந்துரைகளையும் ஏற்று சம்பந்தப்பட்ட துறை வழியே செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தி உள்ளார்.