காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி: டுவிட்டரில் தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புகள், பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உடனடியாக அவற்றை வழங்க மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந் நிலையில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் காத்திருந்தேன். கடைசியாக எனக்கு இப்போது கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. ஓய்வு, மருந்துகள் ஆகியவற்றின் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டுவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.