டெல்லி

பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுஸ்மிதா தேவ்  மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

தற்போது நாப்கினுக்கு 14.5 சதவிதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதுமிகவும் அதிகம். இதனால் வறுமைக்கோட்டுக் கீழே வாழும் பெண்களால் நாப்கின்களை வாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் நாப்கின்  மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிகபடியான வரி,  பெரும்பாலான பெண்களின் வாழ்வை சீரழிப்பதாக உள்ளது . இது பாலின சமத்துவத்தை மறுப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை 355 மில்லியன்  பெண்களில் 12 சதவிதத்தினர் மட்டுமே நாப்கினை பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரத்தை கூறியுள்ளார். ஜி எஸ் டி யில் கூட 12 சதவிதம் நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்திருக்கும் சுஸ்மிதா தேவ்,  இந்தியாவில் காண்டமும், கருத்தடையும் வரிவிலக்களிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களின் அடிப்படை தேவையான நாப்கினுக்கு வரியிலிருந்து விலக்களிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்  வகையில் தயாரிக்கப்படும் நாப்கினுக்கு நூறு சதவித வரிவிலக்கும், சூழலியலை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு குறைந்தளவில் வரி விதிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.