மாவட்ட பயணங்களுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்ய காக்கிரஸ் எம் பி வலியுறுத்தல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

நாடெங்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.   ஆயினும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலைமையை பொறுத்து  இதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.   தமிழகத்தில் இன்னும் இ பாஸ் முறை தொடர்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மக்களவை  உறுப்பினர்  திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு இந்திய முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெற வேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை நீக்கி உள்ளது.

ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் தொடரும் இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குக் காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன.  குறிப்பாக திருமணம், இறப்பு மருத்துவம் உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காகச் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தங்கும் விடுதிகள், சுற்றுலா போன்றவை செயல்படாத நிலையில் அநாவசியமாக யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லப் போவதில்லை. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்னமும் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாமல் பரவிவரும் கரோனா தொற்றால் மக்கள் கடும் பீதியிலும் பயத்திலும் உள்ளனர்.

எனவே தேவையில்லாத பயணங்களை அவசியமின்றி யாரும் குறிப்பாக குடும்பங்களோடு செய்யப்போவதில்லை.   ஏற்கனவே இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகவே இவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கான தடையை ரத்து செய்வதற்குத் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.