டெல்லி:

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட  எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதுபோல, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு டெல்லி பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இனக்கலவரத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறை ஆயுத சட்டத்தின் கீழ் 41 வழக்குகள் உட்பட 254 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த அமர்வில்,  டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன.

முன்னதான நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, ராகுல் காந்தி மற்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் “அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்”, “எங்கள் இந்தியாவை காப்பாற்றுங்கள்” போன்ற முழக்கங்களுடன் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.

அதுபோல திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் காந்தி சிலைக்கு முன்னால் வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகளுக்கு எதிராக கண்களை மூடிக்கொண்டு ஒரு புதிய போராட்டத்தை நடத்தினர்.

ஆத்ஆத்மி கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கதையில் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.