புதுடெல்லி :
பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாளை காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. அதன்படி, கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.