டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆளும் அரசுகளை கவிழ்க்க பாஜக மேற்கொண்டு வரும் முயற்சியை முறியடிக்க காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரத்தை சில நாட்களுக்கு முன் தொடங்கியது. குறிப்பாக ராஜஸ்தானில் கெலாட் அரசை கவிழ்க்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் நேற்று போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், நாளை மறுநாள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதார வீழ்ச்சி, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 11ம் தேதி காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மக்களவை எம்பிக்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, கட்சி தலைமை ஏற்குமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.