டில்லி

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஹத்ராஸ் சென்று பலாத்காரக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதுப் பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்.   அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  காவல்துறையினர் ராகுல் காந்தியைக் காலரைப் பிடித்து கீழே தள்ளி ராகுல் மற்றும் பிரியங்கா மீதே வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர் சி வேணுகோபால் டிவிட்டரில், “முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹத்ராஸ் மாவட்டத்துக்கு இன்று மதியம் சென்று பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 19 வயதுப் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.” எனப் பதிந்துள்ளார்.