காங்கிரஸ் அரசியலையும் மதத்தையும் கலந்ததில்லை : மானிக் சர்கார்

கொல்கத்தா

காங்கிரஸ் கட்சி அரசியலையும் மதத்தையும் கலந்தது கிடையாது என திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மானிக் சர்கார் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் தலைவர்களில் ஒருவருமான மானிக் சர்கார் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார்.   தனது பதவிக் காலம் முடிந்த உடனே தனது அரசு இல்லத்தை காலி செய்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒரு அறையில் தனது மனைவியுடன் இவர் குடியேறினார்.   இது மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது.

மானிக் சர்கார் திரிபுரா தேர்தலுக்கு பின் முதல் முறையாக கொல்கத்தா வந்துள்ளார்.   அவர் அப்போது, “காங்கிரஸ் கட்சியின் சில செய்கைகளால் பாஜக ஆட்சிக்கு வந்தது என்றாலும் காங்கிரஸ் கட்சி அரசியலையும் மதத்தையும் எப்போதும் கலந்தது கிடையாது.   மதச்சார்பின்மையை நிலை நிறுத்தவும்,  பாஜக வை ஆட்சியில் இருந்து நீக்கவும் இடது சாரிகளுடன் மக்கள் ஒன்று சேர வேண்டும்.

தற்போதைய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீரழித்து விட்டது.   கடந்த 4 வருடங்களாக நடந்து வரும் மோடி ஆட்சியில்  தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.   தற்போதுள்ள நிலையில் இடது சாரிகள் மட்டுமே தொழிலாளர் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது.  எனவே பாஜகவை எதிர்க்கும் அனைவரும் இடது சாரிகளுக்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என பேசி உள்ளார்.

இது குறித்து அரசியல் நோக்கர்கள், “கடந்த நான்கு மாதங்களாக திரிபுரா அரசியலில் மும்முரமாக இருந்த மானிக் சர்கார் கொல்கத்தாவுக்கு வந்தது வரும் 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டுத்தான் என்பது தெளிவாகி உள்ளது.   அவர் காங்கிரஸை விமர்சிப்பது போல தெரிந்தாலும் தங்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரசுக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் என்பது அவர் பேச்சில் தெளிவாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.