ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை : ப சிதம்பரம்

சென்னை

ரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என ப சிதம்பரம் கூறி உள்ளார்.

வரும் 2019 ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்து வெற்றி பெற்ற பின் கூட்டணி கட்சிகள் தம்மை பிரதமராக தேர்ந்தெடுத்தால் தாம் பதவி ஏற்க தயார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதை ஒட்டி அனைவருமே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி எனவே கருதி வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது சிதம்பரம், “வரும் 2019 ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை அதிகார பூர்வமான பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே அவ்வாறு கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களையும் அவ்வாறு பேசக்கூடாது என தலைமை அறிவித்துள்ளது.

காங்கிரசைப் பொறுத்த வரையில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பாஜகவுக்கு மாற்றாக முற்பொக்கு அரசு ஒன்று அமைய வேண்டும். அந்த அரசு தனிநபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும்படியும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும், விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் படியும்  அமைய வேண்டும்.

பிரதமர் பதவி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டில்லை. கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் பதவி வேண்டும் என கேட்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சியும் எங்கள் தலைவருக்கு பிரதமர் பதவி தேவை என என்றும் கூறியதில்லை. நாங்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பின் அனைத்துக் கட்சிகளும் ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.