அகமதாபாத்,

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இதற்குமுன் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு சீட் தரப்போவதில்லை என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மத்தியகுழு கூட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் பாரத்சிங் சோலங்கி, குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து ஆய்வு நடத்த, குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அந்தக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி வடிவம் பெரும் என்றும் சோலங்கி தெரிவித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு அல்லது மூன்று பேரை தேர்வு செய்து அனுப்பிவைக்கப்படும்  என்றார் அவர். மாவட்டத்துக்கு ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறிய சோலங்கி, இப்போது வெற்றிப் பெற்றிருக்கும் வேட்பாளர்கள் வேறு தொகுதி கேட்டால் தரமுடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு தேர்தல்களில் தோற்றவர்களுக்கு  வேட்பாளர் வாய்ப்புக் கிடைக்காது என்றுஉறுதியாக தெரிவித்தார்.