ஜோத்பூர்

ராஜஸ்தான் அரசு அவசர சட்டத்தை ரத்து செய்யவில்லை எனில் வழக்கு தொடுக்கப்படும் என சச்சின் பைலட் எச்சரித்துள்ளார்.

பா ஜ க ஆளும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும்.  இங்கு வசந்தரா ராஜே சிந்தியா முதல்வராக உள்ளார்  அங்கு ஒரு அவசர சட்ட முன்வடிவு சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதற்கு காங்கிரஸ், மற்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும், சமூக அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  ஆனாலும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த சட்ட முன்வடிவின் படி நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது புகார்கள் எழுப்பப்பட்டால் அதை அரசு அனுமதி அளித்த பின்பே விசாரிக்க வேண்டும்.   அதே போல அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெயரில் ஊழல் புகார் வந்தால் அது நிரூபணம் ஆன பின்பு தான் அது பற்றிய செய்திகளை வெளியிட வேண்டும் மீறுபவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வரைவுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா இதை சட்டமன்ற ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி உள்ளார். ஆறு வாரங்களில் இந்தக் குழு தனது முடிவை அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.    இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியினருக்கு சிறிது திருப்தி அளித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சச்சின் பைலட், “இந்த சட்ட முன் வடிவு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது எங்களின் எதிர்ப்புக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.  இந்த சட்டத்தை வசுந்தரா ராஜே சிந்தியா திரும்பப் பெற வேண்டும்.  அப்படி இல்லை எனில் இதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.