சென்னை,

காங்கிரஸ் கட்சியினர் இனி வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் கோவையில் அதிமுகவினர் வைத்த அலங்கார வளைவில் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பொதுமக்களிடையே அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கக்கூடாது என்று திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமெரிக்காவில் இருந்து பெண் பார்க்க வந்த இளம் என்ஜினீயர் கே.ரகுபதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு பழனி கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சிங்காநல்லூர் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக சவுக்கு கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வளைவில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியில் அடிபட்ட ரகுபதி படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு கோவை பகுதி மக்களை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைவரின் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர பேனர்கள் வைப்பதை இனியாவது தவிர்ப்பதற்கு முயல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினர் எவரும் இனி வரவேற்பு வளைவுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளளார்.