5 வருடங்களில் 7 கோடி வேலை வாய்ப்புக்கள் : காங்கிரஸ் திட்டம்

டில்லி

காங்கிரஸ் கட்சி 5 வருடங்களில் 7 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தை தயார் செய்துள்ளது.

நாடெங்கும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததைப் போல் மோடி அரசு போதுமான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. அது இளைஞர்களிடையே கடும் ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கத்தினால் பலர் வேலை இழந்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சி வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்பதில் மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ஏழைகளுக்கு நிரந்தர வருமானம் வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வழியில் தற்போது வேலை வாய்ப்பு உருவாக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டி தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஒட்டி ராஜிவ் காந்தி சமகால கல்வி மையம் “வரும் 2019-24 ஆம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு உருவாக்கம்” என்னும் ஒரு திட்டம் உருவாக்கி உள்ளது. அந்த திட்டத்தின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் 7 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளது. அந்த திட்ட வரைவில், “புதிய தொழில்கள் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். இந்த திட்டத்தில் வரும் 5 ஆண்டுகளில் 7 கோடி புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்குவது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 2.94 கோடி பேர் வேலை இன்றி உள்ளனர் எனவும் வரும் 2024க்குள் மேலும் 4.07 கோடி பேர் வேலை தேட நேரிடும் எனவும் மொத்தத்தில் 7 கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்புக்கள் அளிக்க வேண்டி இருக்கும் எனவும் அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்னும் விவரங்கள் அந்த திட்டத்தில் முழுமையாக தரப்பட்டுள்ளதாக கல்வி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

:ராஜிவ் காந்தி சமகால கல்வி மையம் தயாரித்து ’ஜாப் யந்திரா’ என பெயரிடப்பட்ட இந்த திட்ட ஆவணம் அதிக வேலைவாய்ப்பு மற்றும் அதிகம் உற்பத்தி ஆகும் புதிய தொழில் துறைகள் குறித்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தி 30% வரை அதிகரிக்கும். மற்றும் 72% அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.