சிபிஐ இயக்குர் மாற்றம்: நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: டில்லியில் ராகுல் தலைமையில் பிரமாண்ட கண்டன பேரணி
டில்லி:
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து இன்று நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே லஞ்ச புகார் எதிரொலியாக, இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் விடுமுறை எடுத்துவிட்டு செல்லும் படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான புகார் உள்பட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார். இந்த நிலையில், அவர் மாற்றப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான ஆதாரங்களை மறைக்கவே அலோக் வர்மா மாற்றப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அலோக் வர்மா மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

அதன்படி இன்று தலைநகர் டில்லி உள்பட அனைத்து மாநிலங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லியில் உள்ள சிபிஐ தலைமையகம் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார். டில்லி தயால் சிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட கண்டன பேரணி சிபிஐ அலுவலகம் வரை சென்றது. அங்கு ராகுல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், ஆனந்த் சர்மா உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மேலும், 1000க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சி உள்பட சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனதா தளம் கட்சி சார்பாக சரத் யாதவ் போராட்டம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி ராஜாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக நதிமுல் ஹாக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் போராட்டம் காரணமாக டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிபிஐ தலைமையகத்தை சுற்றி பாதுகாப்பிற்காக தடுப்பு சுவர் அமைத்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகா, பீகார், உபி போன்ற மாநிலங்களிலும் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். மேலும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.