சிபிஐ இயக்குனர் மாற்றப்பட்ட விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது

டில்லி:

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மாற்றப்பட்டதை கண்டித்து தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்திய அகில இந்திய காங்கிஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

சிபிஐ இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பனிப்போர் காரணமாக,  சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவருரையும் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு பணித்து. அதைத்தொடர்ந்து,  சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  உட்பட முக்கிய தலைவர்களை கைது செய்தனர். கைதின் போது பேருந்தில் ஏற மறுத்தவர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ராகுல் காவல்நிலையில் அமர்ந்திருந்த காட்சி

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால் தான் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா மாற்றப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி  தலைவர் ராகுல் காந்தி,  குற்றம் சாட்டினார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இது தான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே சிபிஐ இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் தலையிட பிரதமருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.