ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

டெல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் சட்டசபை தொகுதி வேட்பாளரான மாதவராவ் கொரோனா தொற்றால் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் மாதவராவ் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். மாதவ ராவ் மகள் திவ்யா ராவுக்கு அவர் இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

காங்கிரசில் அர்ப்பணிக்கமிக்கவரும், அன்புக்குரியவருமான உங்கள் தந்தை மாதவ ராவ் கொரோனா தொற்றால் காலமான  செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளரான அவர் மிக சிறந்த உழைப்பாளி.

பிரச்சாரத்தின் போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட போது பிரச்சார பொறுப்பை நீங்கள் ஏற்று அனைத்து சமூகத்தினரிடம் இருந்து ஆதரவு திரட்டினீர்கள். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு மே 2ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்தோம்.

ஆனால் விதியினால் மாதவராவ் மரணம் அடைந்த செய்தி கேட்டு பெரும் துயரம் அடைந்துவிட்டோம். உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த நேரத்தில் கட்சி உங்களுடன் துணை நிற்கும். கட்சிக்கு அவர் செய்த சேவை நினைவு கூரப்படும். மாதவ ராவ் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.