ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு-கோவில்பட்டியில் காங்கிரஸ் வினோதமான போராட்டம்

கோவில் பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இணைவழி வகுப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது, ”கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், இவர்கள் கற்கும் கல்வியை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கற்பதற்கு சுமார் 6 மாத காலம் ஆகிவிடும். இது அரசின் சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது. இந்தக் கல்விமுறை சமத்துவமின்மையை உருவாக்கும். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.

அது மட்டுமில்லாமல், ஆன்லைனில் கல்வி கற்க அதிக நேரம் மாணவர்கள் செல்போன் அல்லது மடிக்கணினியில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு அதிக மன அழுத்தமும், உடல் சோர்வும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுபோல, தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வி கற்கும் நிலை உள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இது மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளது. எனவே ஆன்லைன் கல்வி முறையை நிறுத்த வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளையும் தேசியமயமாக்க வேண்டும்’ என்று கோரிக்கைவைத்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.