மோடியை கட்டித்தழுவிய ராகுல்காந்தி….மும்பையில் போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் கொண்டாட்டம்

மும்பை:

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டிப்பிடித்த புகைப்படத்தை மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டராக அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். பேசி முடித்த பின்னர் அவர் பிரதமர் மோடியிடம் சென்று அவரை கட்டித்தழுவினார்.

இது கண்ணியமற்ற செயல் என்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்திருந்தார். இதற்காக பாஜகவினரும் ராகுலை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் ராகுல்காந்தியின் இந்த செயலை பல தரப்புகளில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியை தாடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டித்தழுவிய புகைப்படத்தை போஸ்டர்களாக அச்சடித்தும், பிளக்ஸ் பேனர்களாவும் தயாரித்து மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர். அதில், ‘‘நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல’’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.