டில்லி

பிஎம் கேர்ஸ் நிதிக்குச் சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்விகள் எழுப்பி உள்ளது.

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தொடங்கிய பிஎம் கேர்ஸ் நிதிக்குப் பல சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள செய்திகள் வெளி வருகின்றன.  எல்லையில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இது போன்ற செய்திகளால் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.  எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  அவர் தனது தனிமை மையத்தில் இருந்து வீடியோ மூலம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளார். அந்த சந்திப்பில் அவர்,  ”சீன அத்துமீறல்களை ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்கும் போதெல்லாம் நழுவும் மோடி அரசு, பயம் கொண்ட பாஜக எப்போதும் திசை திருப்பும் உத்திகளைக் கையாளும். அல்லது தவறான செய்திகளை அளிக்கும்.  ஆனால் காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்காக இத்தகைய கேள்விகளை எப்போதும் கேட்கவே செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

சீனா இந்தியப் பகுதியில் ஆக்கிரமிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் நாட்டுக்கு மோடி நல்லது செய்யவில்லை. மோடியின் மனதில் சீனாவுக்கு ஒரு இளகிய இடம் உள்ளது. அவர் குஜராத் முதல்வராக இருந்த போது கூட 4 முறை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன நிறுவனங்கள், சீனாவினால் நிதி முதலீடு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு உதவி அளித்துள்ளன. ஹுவாவே நிறுவனம் ரூ.7 கோடி,  ஸியோமி  ரூ.15 கோடி,  ஒப்போ ரூ. 1கோடி என பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்துள்ளன.  அத்துடன் ரூ.100 கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்த பே டி எம் நிறுவனத்தில் 38% சீன முதலீடு உள்ளது. அதைப் போல் சீன சமூக வலைத்தள நிறுவனமான டிக் டாக் ரூ.30 கோடி பிஎம் கேர்சுக்கு நிதியளித்துள்ளது. இதுவரை இந்த நிதியின் கீழ் ரூ.9,678 கோடி திரட்டப்பட்டுள்ளது

இந்த பிஎம் கேர்ஸ் எப்படி இயங்குகிறது, யார் கட்டுப்படுத்துகிறார்கள்? என்பது ஒருவருக்கும்  தெரியாது. இந்த நன்கொடைகள் எதற்குப் பயன்படுத்தப் படுகிறது? என்பதும் தெரியாது. இந்தியாவில் உள்ள சிஏஜி உட்பட எந்த ஒரு பொது அதிகாரம் படைத்த அமைப்பும் இதனைத் தணிக்கை செய்ய முடியாது.  இது பொது அதிகாரத்தின் கீழ் வரும் அமைப்பே அல்ல  என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது.  இதனுடைய நடவடிக்கைகள் கொண்ட அமைப்பாக ரகசியமாக நடந்து வருகின்றன என்பதால் வெளிப்படத்தன்மையும் பூஜ்ஜியம் பொறுப்பேற்பும் பூஜ்ஜியம், ஆக உள்ளது.

சீனா நாட்டின் மீது வேறுபாடுகள் இருக்கிறது என்றால் ஏன் சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்க வேண்டும். அல்லது பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பிஎம் கேர்ஸுக்கு நிதி திருப்பி விடப்படுகிறதா?

இந்திய நாட்டின் பிரதமர் தன்னுடைய பதவியைச் சமரசம் செய்து கொண்டு சீன நிறுவனங்களிடமிருந்து ரூ.100 கோடி பெறுமான நன்கொடைகளைப் பெற்றால் அதுவும் சர்ச்சைக்குரிய ரகசிய விதங்களில் பெற்றால், அவர் எப்படி சீனாவின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்துவார், அல்லது தடுப்பார்? இதற்குப் பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும்” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.