வாக்கு மைய முகவர்களுக்காக வழிகாட்டுதல்களை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பின்பு வெளியான சர்ச்சைக்குரிய முரண்பட்ட கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், அந்தக் கட்சியின் முகவர்கள் வாக்குகள் எண்ணப்படும் நாளில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற ஒரு வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு இதை உருவாக்கியுள்ளது. இந்த விதிமுறைகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கட்சியின் வாக்கு எண்ணும் மையங்களின் முகவர்களுக்காக வெளியிட்டார்.

ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் நியமனம் செய்யப்படும் விதிமுறைகள் முதற்கொண்டு, ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விளக்கங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக, வாக்கு எண்ணும் நாளில், எதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் மற்றும் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு தனிப்பிரிவே அந்த வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றுள்ளது.