மும்பையில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வரச் சிறப்பு ரயில் இயக்க கோரும் காங்கிரஸ்

சென்னை

மும்பை நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க கோரி  தமிழக முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடிதம் எழுதி உள்ளார்.

மகாராஷ்டிராவின் தலை நகரான மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.   இந்நகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் தாராவி பகுதியில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  எனவே தமிழர்கள் சொந்த ஊருக்கு வர விரும்பி கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தமிழக முதல்வர் பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “லட்சக்கணக்கான தமிழர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அதில் மும்பை மாநகரில் வாழ்கிற தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.  மகாராஷ்டிர அரசு இந்தக் கோரிக்கையை மகாராஷ்டிரா, தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.

தமிழக அரசுக்கு மும்பையில் வாழ்கிற தமிழர்களைச் சிறப்பு ரயில்கள் மூலமாக தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதை தாங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதனால் மும்பை வாழ் தமிழர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்துக்கு மகாராஷ்டிராவில் இருந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதையும், குறிப்பாக மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கு மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களையோ அல்லது வழக்கமான ரயில்களையோ, மத்திய அரசு இயக்கவில்லை.

மும்பை நகரில் தாராவி மற்றும் சயான் கோலிவாடா பகுதியில் குடும்பத்தோடு வசிப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் தமிழர்கள். இவர்களுக்கு மும்பை முகவரியில் ஆதார் அட்டைகளும் உள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்த தமிழக தொழிலாளர்களுக்காக 5 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  குறைந்தது 3 சிறப்பு ரயில்களையாவது இயக்கத் தயாராக மாநில அரசு இருந்தது.

ஆயினும், இதில் பயணம் செய்வோரிடம் தமிழக முகவரியில் ஆதார் அட்டை இல்லை என்றும், அவர்கள் தமிழர்கள் தானா என்றும் தெரியவில்லை என தமிழ்நாடு அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் நிராகரித்துவிட்டன. அரசின் இந்த அணுகுமுறை மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் உள்ள முகவரியில் ஆதார அட்டை பெற்றுள்ள மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சிறப்பு ரயில்கள் மூலம் திரும்பி விட்டனர். வேறு எந்த மாநில அரசும் இதுபோன்று நிராகரிக்கவில்லை. சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வியையும் மற்ற மாநில அரசுகள் எழுப்பவில்லை. தமிழக அரசு மட்டும் இத்தகைய நிபந்தனை விதிப்பது மிகுந்த வியப்பை தருகிறது.

மகாராஷ்டிரா முகவரியில் ஆதார் அட்டை பெற்ற இந்த தமிழர்கள் தினக் கூலிகளாகவும், தோல் தொழிற்சாலை, ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது தற்போதைய பிரச்சினையை மனிதாபிமானத்தோடு தமிழ்நாடு அரசு அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக்குத்  தமிழக அரசும், தெற்கு ரயில்வேயும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயிலையும், வழக்கமான ரயிலையும் உடனே இயக்க வேண்டும்.  மகாராஷ்டிராவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஆதார் அட்டையைக் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது.

மும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வரத் தென்னக ரயில்வேயுடன் இணைந்து சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.என கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி