Random image

பெட்ரோல் விலை குறித்த பாஜகவின் தவறான டிவிட்டர் பதிவு : காங்கிரஸ்

டில்லி

பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட்டரில் தவறான கருத்து வெளியிட்ட பாஜக வை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்தியது.   இதற்கு நாடெங்கும் நல்ல ஆதரவு இருந்தது.   இந்நிலையில் பெட்ரோல் விலை குறித்து பாஜக டிவிட்ட்ரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது நாட்டு மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது.

பாஜகவின் பதிவு

”பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் உண்மை” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட கிராப் பதிவில், கடந்த 2014 முதல் 2018 ஆம் வருடம் வரையிலான விலை ஏற்றம் குறித்து பதிவிடப்பட்டிருதது.   கடந்த 2009 ஆம் வருடம் ரூ.40.62 ஆக இருந்த பெட்ரோல் விலை 2014ஆம் வருடம் ரூ. 71.41 ஆக உயர்ந்ததாகவும் குறிப்பிடபட்டிருந்தது.

அந்தப் பதிவின்படி பெட்ரோல் விலை கடந்த 2014 முதல் 2018 வரை 13% மட்டுமே உயர்ந்துள்ளதாகவும்,  கடந்த 2009 முதல் 2014 வரை 75.8% விலை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடபட்டிருந்தது.    இதே போல் டீசல் விலையும் 2009 முதல் 2014 வரை 81% உயர்ந்துள்ளதாகவும் ஆனால் 2014 முதல் 2018 வரை 28% மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

காங்கிரஸ் பதிவு

காங்கிரஸ் கட்சியினர் இந்த பதிவை ஆராய்ந்து உண்மை தகவலை டிவிட்டரில் பதிந்துள்ளனர்.  அந்த தகவலில், “பாஜக அளித்துள்ள விலை விவரங்கள் தவறாக உள்ளன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை வருடங்களை வைத்து கணக்கிடுவது தவறு.   அந்த வருடங்களில் உள்ள கச்சா எண்ணெய் விலைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் ஒப்பிட வேண்டும்.

அதன்படி பார்த்தால் 2014 ஆம் வருடன் கச்சா எண்ணெயின் விலை ஒரு பாரலுக்கு $107 ஆக இருந்தது.   ஆனால் 2018 ஆம் வருடம் $71 ஆகி உள்ளது.  அதன்படி பார்த்தால் மூலப்பொருளின் விலை 34%  குறைந்துள்ள போதிலும் பெட்ரோலின் விலை 13% உயர்ந்துள்ளது.   இதே போல டீசல் விலையும் உயர்ந்துள்ளது.” என பகிர்ந்துள்ளது.