3மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு: நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

டில்லி:

டந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் 5 மாநிலங்களில் 3மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி  ஆட்சி அமைய வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன் காரணமாக  நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

டில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான்,  சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்படுவது உறுதியான நிலையில், மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது. அங்கு சமாஜ்வாதி கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பக்கை உள்ளது. இதனால் ம.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அந்தக் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் நடனமாடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,  ஜெய்ப்பூரில் உள்ள மாநிலக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வீட்டு முன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மாநில அலுவலகத்தின் முன்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமையகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்கள் வெடிகளைக் கொளுத்தியும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பஞ்சாப், புதுச்சேரி, கோவா உள்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசார் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.