தேவகவுடாவுடன் சோனியா (பைல் படம்)

பெங்களூரு:

நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்  சோனியா  மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் தேவகவுடாவுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுவரை வெளிவந்துள்ள வாக்குகள் எண்ணிக்கையின்படி, பாரதியஜனதா கட்சி 108 இடங்களிலும், காங்கிரஸ் 69 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம், 40 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்நிலையில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவைப்படுவதால், மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் தேவகவுடாவை சந்தித்து பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான சோனியாகாந்தி தேவகவுடாவுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சியினரும் உற்றுநோக்கி வருகின்றனர். தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி அருதிப்பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை கைப்பற்றாத நிலையில், காங்கிரசுக்கு மேலும் சில இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாளம் கூட்டணி ஆட்சி ஏற்பட சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது.

தற்போதைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, பாஜகவுக்கு இன்னும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.