சென்னை

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்துக்கு பாஜக  ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சியே நன்மை அளித்தது எனக் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் என பல முனை போட்டிகள் நிலவி வருகிறது.    ஆயினும் முக்கிய போட்டியாளர்கள் திமுக மற்றும் அதிமுக அணிகள் எனவே சொல்லப்படுகிறது.  திமுக அணியில் காங்கிரஸும்  அதிமுக அணியில் பாஜகவும் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செய்தி தொலைக்காட்சி ஊடகமான புதிய தலைமுறை மக்களிடையே கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.  கடந்த பிப்ரவரி 18 முதல் மார்ச் 15 வரை நடந்த இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.   தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 151 -158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு 786-83 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கலாம் எனக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைப் போல் மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக ஆட்சி தமிழகத்துக்கு நன்மை செய்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.   அதில் காங்கிரசுக்கு ஆதரவாக 60.03% மக்களும், பாஜகவுக்கு ஆதரவாக 22.87 % மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.   தவிர 7.09% வேறு கருத்துக்களையும் 10.01% தெரியாது எனவும் கருத்து கூறி உள்ளனர்.