ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆறாவது ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி:

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி, 6வது ஆதாரமாக முக்கிய தகவலை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் ரஃபேல் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டினார். மேலும், இந்த சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் மீது கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பானர், பவன் கேரா, அனைத்து விதிமுறைகளையும் மீறி, மோடி அரசு, 29,500 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை விமான உற்பத்தியில் முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டேஃபென்ஸ் லிமிடெட் (ஆர்டிஎல்) நிறுவனத்திற்கு அளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தற்போது கிடைத்துள்ள மூன்றாம் தரப்பு ஆவணங்களல்,  36 ஜெட் ரஃபேல் ஒப்பந்தத்தின் வர்த்தக செலவுகளின் அதே எண்ணிக்கையை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாகவும், மேலும், 1,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுட்கால ஒப்பந்தத்தை அம்பானி நிறுவனம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

இந்த தகவல்கள்  ஐசிஐசிஐ வங்கியின் “மேலாண்மை சந்திப்பு குறிப்பில் தெரிய வந்துள்ளது  (Management Meeting Note) இது ஆறாவது ஆதாரத்திற்கான நிரூபணம் என்றும் கூறி உள்ளார்.

இந்த ஆதாரங்களள்,  ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசின் தனியாருடனான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது என்றும்,  இந்த ஆவணத்தின்படி,  ஆர்டிஎல் ஏற்கனவே ஜெட் தயாரிப்பாளரான டாசால்ட் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை அமைத்துள்ளது. இது ரூ. 59,000 கோடி மதிப்புள்ள 36 ரபேல் ஃபைட்டர் ஜெட் வாங்குவதற்கான ஒரு பகுதியாகும் என்றும் தெளிவு படுத்தினார்.