அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆன் லைனில் பிரதமர் மோடிக்கு அனுப்பிய காங்: நேரம் கிடைத்தால் படிக்குமாறு அறிவுரை

டெல்லி: குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு, அரசியலமைப்பு சட்டத்தின் புத்தக நகலை ஆன்லைனில் காங்கிரஸ் அனுப்பி வைத்து இருக்கிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இந் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அரசியலமைப்பு புத்தகத்தை பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த புத்தகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு, அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த தகவலை டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தெரிவித்து இருக்கிறது.

 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அன்புள்ள பிரதமர், அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் விரைவில் உங்களை அடைகிறது. நாட்டைப் பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தயவுசெய்து அதைப் படியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜ்காட்டில் நடந்த போராட்டத்தின் போது காங். தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோர் முகவுரை வாசிக்கும் வீடியோ காட்சிகளையும் பாஜகவுக்கு காங்கிரஸ் அனுப்பி இருக்கிறது.

You may have missed