தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: காங். மேற்பார்வையாளர்களாக வீரப்ப மொய்லி உள்ளிட்ட 3 பேர் நியமனம்

டெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்ட சபை தேர்தலுக்கான பிரச்சார மேற்பார்வையாளர்களை காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது.

 

அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சில மாதங்களில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்காக அனைத்து மாநில கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில், சட்டசபை தேர்தல்களில், தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு காங்கிரஸ் கட்சியானது மேற்பார்வையாளர்களை நியமித்து உள்ளது. அதற்கான அறிவிப்பையும் கட்சி மேலிடம் வெளியிட்டு உள்ளது.

இது குறித்த செய்தி குறிப்பு ஒன்றை அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

அசாம் மாநிலத்திற்கு பூபேஷ் பாகேல், முகுல் வாஸ்னிக், ஷகீல் அகமது கான் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவுக்கு அசோக் கெலோட், லூய்சினோ பாலிரோ, ஜி.பரமேஸ்வரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, நிதின் ரவுத் ஆகியோரும் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹரி பிரசாத், ஆலம்கீர் ஆலம், விஜய் இந்தர் சிங்லா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.