கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம்? நாவலை மேற்கோள்காட்டி காங்கிரஸ் சந்தேகம்

டெல்லி: கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம் என்று சந்தேகம் எழுந்து உள்ளதாகவும். சீனா அதை வேண்டும் என்றே பரப்பி வருகிறதோ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறி இருக்கிறார்.

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ். சீனாவில் பலி எண்ணிக்கை 2,000 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மற்ற நாடுகளுக்கும் பரவி அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ், ஒரு உயிரியல் ஆயுதம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கருத்து கூறி இருக்கிறார். அதற்காக, 1981ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தையும் அதில் உள்ள தகவல்களையும் மேற்கோள் காட்டி இருக்கிறார்.

அமெரிக்க எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ் என்பவர் எழுதிய தி அய்ஸ் ஆப் டார்க்னெஸ் (The Eyes of Darkness)என்ற புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.

அந்த நாவலில் வுஹான் 400 எனப்படும் ஒரு வைரஸ் வுஹான் நகருக்கு வெளியே ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் இந்த வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.