மார்க்கெட் இழந்த நடிகரான விவேக் ஓபராயின் படமே பிஎம் மோடி பயோ பிக்: காங்கிரஸ் பதிலடி

--

டில்லி:

பிஎம் நரேந்திர மோடியின் பயோபிக்  படத்தில் நடித்துள்ள நடிகர்  விவேக் ஓபராய்,  படம் குறித்து ஒருசிலர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜித்வாலா, மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம், பிஎம். நரேந்திர மோடி படம் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள  ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படம் வரும் 12ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் வெளியானால் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என கருதி,  படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் நடிகரான விவேக் ஓபராய்,   ஏன் இவ்வளவு சாதாரண ஒரு திரைப்படத்திற்காக சிறந்த மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. மேலும் மோடி ஒரு ஹீரோ, எனக்குமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களுக்கான ஹீரோவாக அவர் இருக்கிறார் என்று  கூறியிருந்தார். விவேக் ஓபராய் காங்கிரசாரை குறிப்பிட்டே பேசியதாக கூறப்படுகிறது.

விவேக் ஓபராயின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா,  பிஎம் மோடி படம்  மார்க்கெட் இழந்த நடிகர், தோல்வியடைந்த தயாரிப்பாளர், மற்றும் தான் ஜீரோ என நிரூபித்த ஒருவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

இந்த படம் கருப்புப்பணத்தினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என நிச்சயம் விசாரிக்க வேண்டும் என்றும்,  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறினார்.